வாரத்தின் முதல் நாளான இன்று பேருந்தை பிடிக்கும் அவசரத்தில் நான் முகம் வழித்து அவதியாய் குளித்து அந்த பேருந்தை அடைந்தேன். இருக்கையில் இடமில்லை, அனைத்து இருக்கையிலும, அமர்ந்து வேலை பார்க்கும் அலுவலகப் பணியாளர்கள். சேறு மிதிக்கும் கால்கள் நின்று கொண்டிருந்தன. கதிரறுக்கும் கைகள் கம்பியை பிடித்திருந்தன. நானும் ஏறிச்சென்று "திருடர்கள் ஜாக்கிரதை" பகுதியில் (ஆண்கள் பகுதிதான்) இருக்கை இல்லாததால் இடிபாடுகளுக்கிடையே நின்றுகொன்டேன். நான் பயணித்த பேருந்தை பார்த்த போதுதான் என்னைப்போல பேருந்தும் வறுமைக்கோட்டுக்கு கீழே என்பதை உணர்ந்தேன்.
அப்போது ஒரு கிராமத்தில் பேருந்து நின்றது. சில நொடிகள்-சில பயணிகள், அதில் ஒரு பெண் கைக்குழந்தையோடும், இன்னொரு கையில் ஒரு சிறுவனோடும் ஏறினாள். அருகில் அமர்ந்திருந்த ஆண்கள் அப்பெண் "இருக்கையை கேட்பாளோ" என ஓரக்கண்ணால் பார்த்து தலைகுனிந்தனர். ஆனால் பெண்ணின் வலியறிந்த மற்ற பெண்களோ, இப்பெண்ணை பார்த்ததும் முகத்தை எதிர்திசையில் திருப்பிக் கொண்டனர். ஆனால் அந்த தாயோ யாரிடமும் எதையும் எதிர்பாராதவளாய் குழந்தைகளை இறுகப் பற்றி பயணத்தை தொடர்ந்தாள்.
தனக்கு மானமுண்டு என பிதற்றும் இவர்களின் மனிதாபிமானம் எங்கே? இந்த பெருமை பீத்தகலயன்கள் தன்னை தங்கமாய் நினைக்கும் பித்தளைகள் என்பதில் எனக்கு ஐயமில்லை. இப்படி என் தசைகளனைத்தும் வசைபாடும்போது - அந்த சிறுவனைப் பார்த்தேன், பேருந்தின் வேகத்தையும் ,. நகரும் மரங்களையும், தான் இடம்பெயர்ந்து செல்லும் அறிவியலையும் கண்டு ஆச்சரியத்தோடு பயணித்துக்கொண்டிருந்தான். அந்த குழந்தைகளை அழகுபடுத்திய அந்த தாய் தான் பொட்டு வைப்பதையும் மறந்திருந்தாள், இருந்தும் அவளின் முகத்தை தாய்மை அழகுபடுத்தியிருந்தது.
இருக்கையை எதிர்பாராமல் பயணம் செய்யும் அவள் தன் குழந்தைகளுக்கு "யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் வாழ் - இரந்து வாழ்தல் இழிவு" என மறைமுகமாய் உணர்த்துவதாய் நான் நினைத்தேன். அது உண்மை என்பதை உணர்த்தும் வகையில் சுயநல இருக்கையில் மானத்தோடு (மனிதாபிமானத்தை தவிர) அமர்ந்திருக்கும் மொக்கைகளை பார்த்து பொக்கை வாயில் சிரித்தது, தாயின் இடுப்பில் இருக்கை கொண்ட கைக்குழந்தை.
No comments:
Post a Comment