Monday, March 28, 2011

ஆச்சர்ய குறியும்! ​கேள்விக்குறியும்?




 
இன்றைய நல்ல குழந்தைதான்
நாளை நாட்டின் ஆச்சர்ய குறி!
இன்றைய குழந்தையின் வாழ்வில்
சாத்தியமா என்பது கேள்விக்குறி!

சன்ரைஸ் ஆகுமுன்னே
டைம்பீசு அலறுது!

சன் லைட் வருமுன்னே
காலைக்கடன் முடியுது!

பிரேக்பாஸ்ட் முடியுமுன்னே
ஸ்கூல் பஸ் வருகுது!

என் உடம்பு வளருமுன்னே
என் மூளை வளருது!

வயசு பெருக்கும் முன்னே
என் உடம்பு பெருக்குது!

எனக்கு வழியில்ல வாலாட்ட
என்தாய்க்கு நேரமில்ல தாலாட்ட!
 

Thursday, March 24, 2011

உழை நீ! இளநி!



நீங்க இளநி குடிங்க!
கட்சி கட்சின்னு சொல்லி
கால் கடுக்க நின்னாரு!

அடுப்பு புகையவில்ல
குழந்தைக்கு துணியுமில்ல!

தேர்தல் வந்தாக்க பாதை
தெரியாம இருந்தாரு போதையில!

கொடி கட்ட போன மச்சான்
கொட சாஞ்சு வந்தாரு!

அவரு கட்சி ஜெயிச்சிடுச்சி
என் வாழ்க்கை முடிஞ்சிடுச்சி!

புள்ளய காப்பாத்த
புதுமைப் பெண்ணா நாமாறி
அருவா கையிலெடுத்தேன்!

எந்த கட்சி வந்தாலும்
எம்பொழப்பு அன்னாடங்காச்சிதான்!

எம்புள்ள கஞ்சிகுடிக்க
நீங்க இளநி குடிங்க!
 

Wednesday, March 23, 2011

வந்தது வந்துவிட்டது! காதல்!


ஊசலாடும் நெஞ்சிலிருந்து
உயிரை பிரித்து எடுத்தாயே!

வாழும் வாழ்க்கை வீணென்று மெல்ல
சாகும் உயிரை தடுத்தாயே!
 
நேசம் என்று உட்புகுந்து என்
வேசம் முழுதும் மாற்றிவிட்டாய்!

காகித கடிதம் ஒன்றை தந்து வெண்
காகித மனதில் உன் பெயரிட்டாய்!

பெருமழையில்
பெரும் மலைகள் கரைவதில்லை!

சுடும் வெயிலில்
நதிகள் சுடுவதில்லை!
 
காதல் இருக்கு ம​லை​போல!
காதல் ஓடுது நதி​போல!

Friday, March 18, 2011

பூ! பூ பூ​வையர்




பூவும்
பூவையரும் ஒன்றே!

அதனால்
இதுவும் நன்றே!
அழகு
ஆம் அழகுதான்!

பூவின் இதழ் பிரிவதும்
காதலில் இதழ் சேர்வதும்!
பூவை பறிச்சாலும்
பூவையர் சிரிச்சாலும்
வைக்க ஒரு இடம் வேணும்!

பூவை பறிச்சா ஒரு நாள்தான்
பூவையர் சிரிச்சா ஒரு யுகந்தான்
அழகா ஒரு காதல் தோணும்!


அருவிக்கு
அருகில் பெண்ணைப் பார்த்தபோது
வந்து விழுந்த
வார்த்தைகள்!



பால்போல் அருவி
உன் முகமும்தான்!

தலைகீழாய் விழுவது
அருவிமட்டுமல்ல ஆண்களும்தான்!

அருவிக்கு அருகிலே இருக்கிறாள்
மனதை அழகிலே நனைக்கிறாள்!

இயற்கையைவிட அழகாய் இருக்கிறாய்
இருந்தும் நீ ஏன் சிரிக்க மறுக்கிறாய்!

சாத​னைப் ​பெண்!


தடைகளை தாண்டும்
தன்னம்பிக்கை பெண்
தமிழகத்தில்
தண்ணீருக்காக!


படிதாண்டா பெண்
என்பதுதான் வாக்கு!
தண்ணீருக்காக
தலைகீழானது
இன்றைய போக்கு!


 
ஒரு குடம் நீருக்காய்
உயரம் தாண்டும் இவள்
ஒலிம்பிக் சென்றிருந்தால்
ஒரு பதக்கம் கிடைத்திருக்கும்!

விளையாட்டுத்துறையும்
நீர்வளத்துறையும்
செய்துகொண்ட வளர்ச்சி
ஒப்பந்தமோ இது?
 
பூட்டு போட்ட கேட் எதுக்கு?
பூவையருக்கு வேற ரூட் இருக்கு!
 
எம்புருசன் தண்ணிபோட்டு
படுத்திருக்கான் திண்ணையில!

உசரம் தாண்ட வேண்டியிருக்கு
ஒரு குடம் தண்ணிக்குத்தான்!
 
அவனோட போராட்டம் கோட்டருக்கு
சாதனை உசரம் தாண்டிபுட்டேன் வாட்டருக்கு!
என்னத்தான் உசத்திபுட்டான்
எம்புருசன் வாழ்க்கையில!
 

Friday, March 11, 2011

Master Batsman Sachin


இருபது ஆண்டாய்
கிரிக்கெட்டை ஆண்டாய்!


சென்சுரியில் ஒரு சென்சுரி அடித்த
உன்னை மறவாது 21வது சென்சுரி !

தேர்தல் ஆத்திச்சூடி!


அய்ந்தாண்டு ஆட்சியிங்கே
ஆட்டம் காணுது!
இலவசத்தை நம்பித்தான்

ஈன்னு இளிக்குது!
உயர்வான கொள்கைன்னு
ஊரெல்லாம் ஓட்டுகேட்குது!
எதிர்க்கட்சி குற்றச்சாட்டை
ஏற்க மறுக்குது!!
ஐந்து கட்சி கூட்டணின்னு
ஒன்னா நிக்குது!
ஓட்டு போடும் மக்கள்?! முழிக்குது!!

Monday, March 7, 2011

மார்ச் 8 ​பெண்கள் தினம்

பெண்ணுரிமை தினம் இன்று!

ஆண்கள் புரிதல் நன்று!!


பெண்ணுரிமை பத்திதான்
பலவாறு பேச்சிருக்கு!
உண்மையில அவங்களுக்கு
உரிமைதான் எங்கிருக்கு!

பொண்ணுன்னா பூங்கொடிதான்
ஆண்ணுன்னா அடாவடிதான்!
பொறந்ததுதான் குத்தமா இல்ல
ஆண்மனசுலதான் அசுத்தமா!

தலைப்பாக்கட்டி கவிஞனவன்
பாட்டுக்கட்டி சொன்னானே!
அவனோட தாசன் கூட
துணைக்குத்தான் வந்தானே!

பெண்ணில்லாம ஆணில்ல
பெண்ணில்லாம யாருமில்ல!
ஆனாலும் அவளுக்கு
ஆணால உரிமையில்ல!

ஆண்களெல்லாம்
அடியெடுத்து வைக்கனும்
பெண்ணுரிமைக்காக!


மாண்மை
வண்மை
நன்னேர்மை
பெண்மை
இவற்றை உணர்ந்த
ஆண்மை சிறப்பு!!
பெண்கள் சமமாய் வாழ
வாழ்த்தொன்று போதாதே!
அவர்களுக்கு குரல்கொடுத்தால்
ஆண்மை தாழ்ந்தொன்றும் போகாதே!
 
வணங்கத்தான் வானமிருக்கு
கும்பிடத்தான் சூரியனிருக்கு
அடங்கிப்போன உங்களை
அடக்கி வச்சதாருங்க!
ஆம்பளைக்கு நன்றி வேண்டாம்
அவனும் உங்க தோழர்தான்
அந்த எண்ணம் மாறவேண்டாம்!
நன்றி சொன்னால்
நட்பு பலப்படுங்க.
புதுவழி காணத்தான்
புரட்சி செய்யனும்
புறப்படுங்க!

ஏ​ழை மாணவனின் ஏற்றமிகு வாழ்வு!

ஆறு பேரு உள்ள
எங்க வீட்டுல நான்
மட்டும்தானே படிக்கிறபுள்ள!

இத்தனை நாளாக
எங்க ஊருல
பள்ளிக்கூடம் ஏதுமில்ல!

அப்பன்கிட்ட அடிவாங்கி
ஆத்தாகிட்ட வசைவாங்கி
அஞ்சாப்பு படிச்சுபுட்டேன்!
ஆறாப்பு படிக்கதான்
ஆறு மைல் போக வேணும்!
தனியாரு பஸ்ல போக
தினசரிதான் காசு வேணும்!

அரசாங்கம் ஏழையத்தான்
உசத்துமுன்னு சொன்னாங்க!
உண்மைதான் அது
உணர்ந்துபுட்டேன் நான் இப்போ
உச்சியிலே ஓடுற பஸ் மேல!

உணவகம்

முகநூலில் என் நண்பர் சரவணபவன் பற்றி ​வெளியிட்ட தகவலுக்கு நான் எழுதிய​வை!

விலைவாசி பற்றிய பேச்சே புளித்துப் போய் விட்டது -
இட்லி மாவைப் போல!

ஒரு முரண் கவிதை!
சரவணபவனின் இருக்கையில் ஒரு
சாமானியன் இருக்கையில் !!



அலைபேசி
விலைவாசி இரண்டுக்கும்
உட்படாமல் உருப்படியாய் யாரும்
உளரோ?!



இட்லி இரண்டு இருபத்தஞ்சு
மசாலா மறஞ்ச தோசை ஒன்னு நாற்பத்தஞ்சு
பேப்பர் போல தோசை ஒன்னு ஐம்பத்தஞ்சு
நூறு பருக்கை சோறு இங்கே 155
பலபேரு திங்கிறத பாத்துப்புட்டு!
பத்தாத வயித்தோட வந்தேன் நானும்
என் கையிலதான் இல்ல துட்டு!


ஏழையின் வயிறு
எதைப் போட்டாலும்
செரித்துவிடும்!
இன்றைய விலைவாசி
எவ்வளவு பணம் இருந்தாலும்
அரித்துவிடும்!

Wednesday, March 2, 2011

கல்ல​றை நிம்மதி

நீ வாழும்போது அறிஞனாயினும்
இங்கு வந்தபின்
நீ வாழ்வியல் அறிஞன்!


 கல்லறை
கல்வெட்டில்
ஜாதிப் பெயர்!
காக்காய்கள்
கரைகின்றன
...ஒரே மரத்தில்!

கல்லறையில் கூட
பார்க்கும்போதே
பரமஏழை தெரிகிறான்!


நீ வெளவாலாய்
தொங்கினாலும் அந்த
தலைகீழ் கல்லறை
தத்துவத்தை அறிய முடியாது!


உலகியல் கொடுமை கண்டு
உலகைவிட்டு பிரிந்த என்னை -
பேயென்னு சொல்லி மீண்டும்
பிறப்பெடுக்க வைக்காதீர்!

Tuesday, March 1, 2011

விதை இப்போ மரமாச்சு!


தன் மகன் குழந்தையாய் இருக்கும்போது போட்ட விதையில் முளைத்த மாமரத்தினடியில் அந்த தாய் உணவு உண்டு களைப்பாறும்போது,..........

மாமரமே உன்னை பாத்தா
மகனோட ஞாபகந்தான்!
சின்னதா விதை போட்டானே
சிறுபிள்​ளை அவனுந்தான்!

நீ மண்ணுல காலூனி
மானத்தை பாப்பதுபோல்
இந்த ஊர்ல பொறந்த எம்புள்ள
படிக்கறான் வெளி ஊர்ல!

நல்ல குணம் அவனுக்கு
உன் பச்ச இலைபோல!
அறிவும் பழுத்திருக்கு
உன்னோட மாம்பழம்போல!

உலகம் தெரிஞ்சிருக்கு
நான் பெத்த ஒத்தபுள்ள!
என் மனசு நெறஞ்சிருக்கு
காய்ச்ச இந்த மரம்போல!

வெய்யில்ல வேல பாத்து
பள்ளிக்கு நான் சேத்தேன்!
இத்தனை நாள் இருண்டாலும்
இப்ப என்வாழ்வு வெளிச்சமாச்சு!

சின்னதா விதைபோட்டு
நீயும் காத்திருந்தா!
பெருசா புகழ்சேரும்
காயத்துக்கு அருமருந்தா!

களைப்பா இருக்குன்னு
சாஞ்சேன் வேர்மேல!
நிம்மதிய நான் கண்டேன்
எம்புருசன் மார்போல!