Monday, November 5, 2012

கவிதை துணுக்குகள்!

இடம் பொருள் கண்டு நீ சிரி
பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன
பூங்காங்களில்!
              --- x --- 
சாலை கடக்கும் உன்னை
சலனமின்றி கண்டு மகிழ் 
என்றது சிகப்பு விளக்கு!
              --- x --- 
வெட்கம் நிறுத்திடு நீ
பற்களிடை சிக்கி
உடையும் பிறைநிலாக்கள்!
              --- x --- 
பிணமான தேநீர் கோப்பைகளுக்கு
ஓர் அடையாளம் உண்டு -
உன் இதழ் பூச்சின் நிறம்!
              --- x --- 
காதலில் எதிர்பார்ப்புகள் இல்லை -
காதலின் முதல் பொய்!
              --- x --- 
பெண்மை... 
மென்மை...
மென்மைத் தன்மை...
அறிதலில் ஆண்மை!

பெண்மை... 
தொன்மை
தொன்மைத் தன்மை
கண்டது ஆண்மை
தாய்மை எனும் தூய்மை!
              --- x --- 
சலூன் கடை தொலைக்காட்சியில் 
நகைச்சுவைக்காட்சி என் சிரிப்பையும் 
சேர்த்து மழித்தது சவரக் கத்தி!
              --- x --- 
மகிழம்பூ மரத்தின் மேனியில்
மறந்தவளின் பெயர் வடுவாக!
புதுமனையாள் கரம்சேர்த்து 
பூங்கா சென்றபோது
கடைக்கண் வருடியது மறைவாக!
              --- x --- 
மிதமிஞ்சிய மின்தடை
அனைவர் மனதிலும் 
அணுஉலைகள்!

யானைவாய் செலவு
எறும்புவாய் சேமிப்பு
யூ.பி.எஸ்சில் மின்சாரம்! 

கைவிசிறிகள் "சீலிங்"
பார்த்து சிரிக்கின்றன
"விதி வலியதென்று"
              --- x --- 
உரசும் இதழ்களில்
உராய்வை குறைக்கவே
எச்சில் எனும் கள்!

மின்தடை நேரத்தில் 
இதழ்களில் சிறுமின்சாரம்
நம் முத்தம்!

அடிக்கடி ஆள்மாறும் 
அமைச்சர் பதவி போல்
நம் இதழ்கள் அடிக்கடி 
இடம் மாறட்டுமே!
              --- x --- 
ஏழ்வண்ணமும் மீளாதோ
மீண்டும் ஒற்றை மழைத்துளியில்!
              --- x --- 
வேரற்ற மரம் நான்
கடைக்கண் கண்டபோதே
விழுந்து விட்டேன் 
விழுதுவிட்டேன்
காதல் வாழ்விலே!
              --- x --- 
தனிமையில் காதல் சுகம் 
தகிப்பது போதாதென்று 
மழை ரசித்து சுகம் கண்டு 
துரோகமிழைத்தேன் காதலுக்கு!
              --- x --- 
எப்படி இருக்கிறாயென
என்னவள் கேட்டது 
என்னுளிருக்கும் அவளிடமே!

கண்களின் வழியே இதயத்தின்
நேச வரிகளை படிப்பவள் நீ !

உன்னோடு காதல் 
உற்சவம் இல்லையேல் 
சவம் தானே என் உடல்!

வெற்று மனிதர்களை விட்டு
வேற்று கிரகம் செல்ல எளிய
வழி காதல்தானே....!

நீயென்னை கடந்திடு
நானும் கடக்கிறேன்
வாழ்வை உன் நினைவோடு
"காதலில் தோல்வி உனக்கே!"

              --- x --- 

Thursday, September 27, 2012

முதலீடு


அதோ!
கருமையாக்குகிறான் 
ஏழைச் சிறுவன் "ஷீ"வையும் 
தன் வாழ்வையும்! 

பணமலர் பறிக்க 
ஆசைப்படும் பெற்றோர்கள்
உழைத்து உதிர்ந்திடும் 
மொட்டு குழந்தைகள்!

அன்னிய முதலீடுக்கு
கையேந்தும் மத்திய அரசே
உள்நாட்டு முதலீடு உருக்குலையுது 
உழைக்கும் குழந்தையாய்!

துணுக்கு கவிதைகள்!

மரத்தை பிரிந்து 
இறந்த இலைகள் 
மழை நீரில் உலா!
--------------------------

மான்விழி கண்டதும்
என்ன நிலையிது
என்ன உணர்விது
என்ன உறவிது
என்மனம் சொன்னது
என்னவள் என்றது!
--------------------------

சிணுங்கலில் தொடங்கும்
சிற்றின்பம்போல் 
சிறுமழையும்
சில மணித்துளியில் முடிந்திடுதே...

தொடராதோ இவ்விரண்டும்!
-----------------------------------------

தெய்வத்தை நேர்நின்று
வருடிப்பார்க்கும் வாய்ப்பாய்
நம் தாய்!

தோல்வி மறக்கும் வேள்வி


என்காதலில் இலையுதிர்காலம்
இனிவாழ உன்நினைவுகள் போதும்
என்றெண்ணி இருந்த நானும்
கனவுக்கு விட்டேன் இடைவேளை
கொடுஞ்செய்தி கண்டேன் அதிகாலை!

பட்டாசு ஆலையில் ஐம்பது சாவாம்
பாவை ஒருத்திக்கு ஐம்பது ஆளாம்
அணுஉலை திறக்கும் அரசாங்கம்
ஆயுள்வரை மறுக்கும் போராட்டம்!

என்னைசுற்றி இத்தனை நடக்க
மறந்துநானும் காதலில் மிதக்க
இழந்த காதலால் இனி என்னாகும்
உதவிக்கரம் நீட்டி உரம் சேர்ப்பேன்
அவர் வாழ்வுக்கும் என் வாழ்வுக்கும்!

மின்தடை விரும்பிகள்!


மரணமும் மின்தடையும்
எப்போது நிகழுமென
மானுடம் அறியாதே!

காலையில் மின்தடை வேண்டுமென
கடைதிறக்கும் முதலாளிகள்!

மதியத்தில் மின்தடை வேண்டுமென
நெடுங்கதை நோக்கும் மாதர்கள்!

மாலையில் மின்தடை வேண்டுமென
மகிழ்ந்து விளையாடும் குழந்தைகள்!

சந்துதெருவின் சந்திப்பின்போது மின்தடை
வேண்டுமெனும் சிற்றின்ப காதலர்கள்!

இரவில் மின்தடை வேண்டுமென
இருபிள்ளை பெற்ற தகப்பன்கள்!

காதலில் மட்டும்!

முடிகோதும் உன்
விரல்களை தேடியே
இங்குமங்குமாய் தலைமுடி
அலைகிறதே தவிர
கடற்கரை காற்றால் அல்ல!
-------------------------------------

எதிர்ச்சொற்கள் 
எதிர்வினைகள்
எதுகை மோனைகள்
ஒத்துப்போகின்றன
காதலில் மட்டும்!

வெடி விபத்து!


அப்பாவியின் சதையும்
அதிகாரிகளின் மெத்தனமும்
வெடிவிபத்தில் சிதறியது!

உள்ளம் வெடிக்கும்போது
துன்பம் யாருக்கும் கேட்பதில்லை
கோட்டைவரை கேட்டதிப்போது
இறந்தபின் இரண்டுலட்சமாம்!

"பார்" மகனே "பார்"



விரும்பி "கலப்படம்" 
செய்யும் ஓரிடம்!

காதல் தோல்விகள்
நட்பின் துரோகங்கள்
வாடை வீசும் வாந்திகளாய்...

பழரசங்கள் தோழமை 
பலகாரங்களோடு!

அந்திவானின் நிறம்
மதுக்கோப்பையில் எதற்கு?

கசப்பை குடித்து மறக்கிறேன்
கசந்த காதலை!

எதிர்பார்ப்"பூ"



சிறுவிவசாயி நானுந்தான் 
சிறப்பா வாழ வழியுமில்ல
மழைதண்ணிய நம்பாம
விதைவிதைக்க நீருமில்ல! 

உடம்புவலிக்கு குடிச்சவந்தான்
இப்ப மனசுவலிக்கு குடிக்கிறனே!
கண்மூடி தூங்கப்போனா என்
மவ கல்யாண கனவுதானே!

சேறுமிதிச்சி நெல்லுவிதைச்ச
நானும் இப்போ நாதியத்து 
கால்கடுக்க நிக்கிறனே 
காசில்லா அரிசிவாங்க!

கலப்பை பிடித்து உழைப்பை
வியர்வையாய் வடித்து ஒரு
கை சோறுண்டு சுருண்டு
படுத்தேன் திண்ணையிலே
எதிர்காலம் இருள்தானோ
இமை மூடிய விழி போல!

எப்போதாவது...

மழையில் நனைவதை நீ 
தவிர்த்துவிடு நனைத்த 
அனைத்து மழைத்துளியையும்
என்னால் சேகரிக்க முடிவதில்லை...
-----------------------------------------------

உன்னிடமிருந்து அழைப்பு
எப்போதாவது...
எப்போதும் தாவுது 
மனது நினைவுகளால்!
-----------------------------------------------

எதையோ எழுதிடு
அவள் பெயர் சேர்த்திடு 
இறுதியாய் எழுதியவை 
நிறைவுறும் கவிதையாய்...
-----------------------------------------------

பனித்துளி வாழ்வை
பணித்திடு உன்இதழ்மீது!

பூவுதிர்காலம்!

சொற்கள் ஏதுமில்லா
சொல்லாடல் உன் புகைப்படத்தோடு
ஆம்...காதல் செய்கிறேன்
உன்னையும் நீயில்லா
தருணங்களில் உன் நினைவையும்!

------------------------------------------------
மனதுக்குள் கோபப்புயல்
மீண்டும் மீண்டும் உன்மேனி
தொடும் தென்றலாலே!
------------------------------------------------

சுட்டெரிக்கும் கோபம்
மேகத்தின் இடுக்குவழி
உன்முகம் காணும் நிலவாலே!
------------------------------------------------

இன்று
எதுகை மோனைகளுக்கு 
வாரவிடுமுறை உன் 
நினைவுகளின் முற்றுகையால்!
------------------------------------------------

சிரித்தால் இதயத்துக்கு நல்லது!
எப்போதும் சிரித்து மகிழ்கிறேன்
என்னிடமுள்ள உன் இதயத்துக்காக!
------------------------------------------------

ஒவ்வொரு மரத்துக்கும் 
இலையுதிர்காலம் உண்டென அறிவேன்!
பூவுதிர்காலமும் உண்டென அறிந்தேன்
நீ அங்கு வந்த போது...
------------------------------------------------

பெருங்காமம் சிறு சிறு வரிகளாய்
உன் இதழில்...

காதல்....துணுக்குகள்

விழியின் ஒளியில் திராவகம்
வீசியென் வாழ்வை அழித்ததேனடி
உயிரழிந்து நினைவில் கரைந்து
நடைபிணமாய் இருந்தாலது தேனடி!

----------------------------------------------
உயிர்ச்சத்து எனும் வார்த்தையில்
சத்தென்பது காதலியானால் 
அவளே உயிர்க்காதலி....

---------------------------------------------
கண்ணீரும் சுகமெனக்கு
அதில் உப்பாய் உன்நினைவு...

---------------------------------------------
என் காதலின் எல்லை
விரிந்துகொணடே போகிறது
நீ மெளனிக்கும் தருணங்களில்...
---------------------------------------------

காதலியிடம் நொடிக்கொருமுறை
தோற்க முடிந்தால் நீ தான் வெற்றிவீரன்!---------------------------------------------

தனித்து உள்ளங்கள்
தானாய் சேர்த்த காதல் 
வார்த்தை வழுக்கி பிரிந்தபோது
தன்னந்தனியாய் காதல்!

கவலையுறாதே...

பழுத்து விழும் 
பழமாய் இரு
இலையாய் இராதே!

பழுத்து விழுந்தால் 
உணவாவாய் நீ
இலையே ஆயினும்
கவலையுறாதே
மற்றோர் விதைக்கு 
உரமாகிப் போவாய் நீ!

மின்சாரமே....

அடிக்கடி கோபம் 
காதலியிடம் ரசிக்கலாம்
"கரண்ட்"டிடம் அல்ல!

அடிக்கடி தனிமையில் 
விட்டுச்செல்வது சம்சாரத்துக்கு அழகு
மின்சாரத்துக்கு அல்ல!

உழைத்து வியர்த்தலே பெருமை
மின்தடையால் களைத்து வியர்த்தல்
சிறுமையன்றோ?

முப்போதும் காதல்நினைவு
அதுவும் கலைந்திடுதே உடலில்
வியர்வைதுளி வரும்போது!

Thursday, June 14, 2012

அரே ஓ சம்போ...

மளமளவென ஆன்மீகப்பேச்சு
சரசரவென பன்னாட்டுவளர்ச்சி
கொலுகொலுவென பெண்கள்
கிளுகிளுவென படப்பதிவு
கலகலவென ஒளிபரப்பு
படபடவென பரபரப்பு
வளவளவென வழக்குகள்
மணிமணியாய் ஸ்டேட்டசுகள்
முகநூலில்!

அரே ஓ சம்போ...

கல்லறைக்கு செல்வதில்லை

தங்கத்தின் ஜொலிப்பில் 
வண்ணத்துப்பூச்சிகளா?

உன்னைத் தொட்டும் நிறம் 
ஒட்டவில்லையென காலடியில் 
கல்லறையான பூச்சிகளே அதிகம்!

காதல் கல்லறைக்கு செல்வதில்லை
உண்மைதான் ஏனெனில்
காதல் வாழ்வது உடலில் அல்ல
அவள்பேர் சொல்லி துடிக்கும் 
உள்ளத்தில் அல்லவோ?

அப்போது! இப்போது!

வயலுக்கு பாய்ச்சிய நீரில்
வியர்வையின் உப்பை சேர்த்தான்
பலத்தோடு ஏழ்மையாய் வாழ்ந்தான்
அப்போது!

சொட்டுசொட்டாய் நீர்பாய்ச்சி
உரமெனும் உப்பை சேர்த்தான்
வளத்தோடும் வசதியோடும்
பிணிபயத்தோடும் வாழ்கிறான்
இப்போது!

தமிழ்நாடு தற்போது,,,,

நூறாண்டு வாழ்ந்த திருப்தி 
ஓராண்டிலே வந்ததம்மா வந்ததம்மா 
மனம் "பொங்கு"தம்மா மகிழ்ச்சியிலே 
ஆனா வீட்ல கரண்டில்லே!

அதான் ஆடுமாடு தந்தாச்சே 
அடிக்கொரு டாஸ்மாக்கும் வச்சாச்சே
சம்சாரம் அணைக்கையில மின்சாரம் 
எதுக்குன்னு நினைச்சாங்களோ!

கடந்த ஆட்சியில அவரு குடுத்த
டிவிபொட்டி குப்பையில போட்டாச்சம்மா
அரசுகேபிள் வாங்கனும்னு சொன்னதால
50ரூபா கேபிள்கூட 70ரூபா ஆனதம்மா!

ஒருரூவா பணத்தைகூட
உண்டியல்ல போட்டதில்ல
டாஸ்மாக்குல குடுத்துவச்சேன்
நானுந்தான் போதையில!

படிப்பேவராத எம்புள்ள
அங்கபோடும் சோத்துக்கும்
சைக்கிளுக்கும் சட்டைத்துணிக்கும்
செருப்புக்கும் கம்பியூட்டருக்கும்
கால்கடுக்க எட்டுகிலோமீட்டர்
தினந்தினம் நடந்தானே!

இவனைப்போல மாணவனால
என்னம்மா நடந்துரும் நாட்டுல
ஆமாமா இப்டியே இருந்தாத்தான்
உனக்கே ஓட்டுவிழும் தேர்தல்ல!